“வீரசிங்கம் அங்கிள்,” நீங்கள் இல்லாத உலகில் நான் - அன்பு சித்தார்த்தன்



என்றும் உங்கள் முகத்தில் தாடி மீசை

 -கண்டதில்லை 

எப்பொழுதும் சப்பாத்து இல்லாமல்

-பார்த்ததில்லை

நீளக்காற்சட்டை உள்மறையும்

-மேலங்கியும்  

நிமிர்ந்த நடை கொண்டவர்தான்

எங்கள் வீரசிங்கம் அங்கிள்

 

ஆசிரியப்பணி தனிலும் அதிபராய்

-வந்த பின்பும்

நேசமுடன் புத்தி சொல்லி நின்ற

-பக்குவமும்

நீளப்பிரம்புடனே நீ நடக்கும்

-காட்சி அது

நீங்கவில்லை நினைவு பல நீண்டு

-கொண்டே போகிறது. 


சிறு வயதுக் குறும்புகளைக்

கண்டிக்கும் உங்கள் செயல்

வெறுத்தவன் நான் ஆனால் வேதனை

-அடைகின்றேன்

அருமை மொழி ஆங்கிலத்தின்

அறிவுதனை மேம்படுத்த 

முடியாமல் போனது  அன்று

முள்ளாய் மனது இன்று. 

 

இளவயதில் உங்களுடன்

இணைந்திருக்கும் தருணத்தில்

எடுத்துரைக்கும் போதனைகள் 

என் செவிக்கு எட்டவில்லை

கோபமாய்க் கூறுவதாய் - நான் 

 கொண்ட கருத்தெல்லாம் 

பாவம் என எண்ணி இன்று 

 பரிதவித்து வாடுகின்றேன்.

 

விட்டழிந்ததென நினைத்த - எந்தன்

கடிதமும் கவிதைகளும்

பக்குவமாய் பல வருடம் 

பாதுகாத்துத் தந்த போது

கட்டிளமைப் பருவத்தில் - நீங்கள்

காட்டிய கரிசனையை

அற்புதமாய் உணர்ந்தேன் - எனை

            ஆழமாய் ரசித்ததனை! 

 

என்னை நெறிப்படுத்த

எடுத்த முயற்சிகளை

என்னால் உணரமுடியாமல்

போனது அன்று

எந்தன் குறும்புகளை - என்

மனைவி மக்களிடம்

எடுத்துரைக்கும் போதே

உணரமுடிந்தது இன்று

 

உங்களிடம் பெற்றிடாமல்

நான் இழந்த வித்தைகளை

எந்தன் குழந்தைகட்கு - உங்கள்

இறுதித் தருணங்கள்

தந்ததனை - நான் கண்டேன்

தந்தையின் கடமை பல

எந்தனுக்கும் எடுத்துரைத்தீர்

            என்றும் அதை மறவேன். 

 

இன்னல் இடர் நிறைந்த

            இக்கட்டான நாளில்

இறுதி இரண்டு மாதம்

            இணைந்திருக்கும் பாக்கியத்தை

பெற்றவரில் ஒருவன் எனும்

            பெருமை அடைகின்றேன்

பேறாக அதை நினைத்தேன்

பிரியாது அந் நினைவு. 


நீங்கள் இல்லா உலகில் இன்று அந்த நினைவுகளுடன் நான்

பெறா மகன் 

அன்பு சித்தார்த்தன்

Comments

Popular posts from this blog

"Remembering ‘Veerasingam Ayya’" - Dr. Philip G. Veerasingam

“My Teacher, Mr. Daniel Gnanasothy Veerasingam" - Rev. Kanapathippillai David Jebanayagam

"About Sothy. From Selvar Anna." - Jacob. G. Veerasingam

About My Good Friend from School Days, “Daniel.” - Mr. Elkanah Alagurajah

"Sothy Bappa’s Memorial" - Dr. Queenie Veerasingam

என்றும் நீங்காத பெறா மகன் கபிலனின் நினைவுகளிலிருந்து...

"ஜீவனின் அப்பம்" - Jeevanin Appam | Sung by Daniel G. Veerasingam

“கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள்” - உடன்பிறவா சகோதரி, சலா

அமரர் திரு.D.G. வீரசிங்கம் ஐயா அவர்களின் திருச்சபைப் பணி வாழ்விலே , என் நினைவில் உதித்த நினைவுகள் - R.G.தயாளன்