அமரர் திரு.D.G. வீரசிங்கம் ஐயா அவர்களின் திருச்சபைப் பணி வாழ்விலே , என் நினைவில் உதித்த நினைவுகள் - R.G.தயாளன்

 

    திரு.D.G.வீரசிங்கம் ஐயா அவர்கள், இறைசிந்தனை மிக்க சேவையாளன் என்பதனைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இவருக்கு,அவருடைய உள்ளத்தின் ஆழத்திலே இருந்த இறைசிந்தனையுடன் இணைந்ததாக கல்விச் சிந்தனையும்  இருந்ததை நான் அறிவேன். இவர் ஒரு நல்லாசானாய்,அதிபராய் பணியாற்றியதன் காரணமாக கல்வியறிவு குன்றிக் காணப்பட்ட பிரதேசங்களில் கல்வி வளர்க்க வாஞ்சை கொண்டார்.

    1993ம் ஆண்டுப் பகுதியில் ஐயா அவர்கள் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றுகின்றபொழுது, நான் படுவான்கரை பகுதியின் பணி சம்பந்தமாக அவரை சந்திக்க இவரது பாடசாலைக்குச் செல்வேன். அவர் என்னோடு உரையாடும் பொழுது, ஐயா தும்பங்கேணியில் ஓர் காணி வாங்க வேண்டும், அப்படி வாங்கினால் தான் நமது பணியை நிலைநிறுத்த முடியும் என்று கூறுவார். அவர் கூறிய வார்த்தையின்படி நாங்கள் ஒரு காணி வாங்கி, இன்று அப்பகுதியின் கல்வி நிலையமாக  செயல்படுகிறது என்றால் அது அய்யாவின் சிந்தனையின்  உதயம்தான்.அதுமட்டுமல்ல இக் கல்வி நிலையத்தில் அவர் ஒரு ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றினார்.

    இவர் பழுகாமம் திருச்சபையின்  உக்கிராணக்காரராகச் செயல்பட்டு, சபையின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டார். தங்களது சபைக்கு ஒரு புதிய குருமனை கட்ட வேண்டுமென விடாப்பிடியாய் இருந்து பல முயற்சிகளை எடுத்ததன்  நிமித்தம் அவரது காலத்திலே புதிய குருமனை கட்டப்பட்டது. அது மட்டுமல்ல தமது ஆலயம் ஒழுக்கு நிறைந்ததாக  இருப்பதனால் அது புனரமைப்பு செய்ய வேண்டுமென அவர் எடுத்த முயற்சியின்  பலனாக ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டு, முழுமையாக மாபிள் பதிக்கப்பட்ட ஒரு அழகான ஆலயமாக  இன்று  காட்சியளிக்கின்றது என்றால் அது  ஐயாவின் அயராத முயற்சியே காரணம்.

     கல்லாறு சேகரத்தில் ஐயாவின் சேவையை மறக்கவே முடியாது.சேகரக் கூட்டங்களில் தவறாது கலந்து கொள்வார். களுவாஞ்சிகுடி  திருச்சபையின் ஆண்கள் விடுதி, கல்லாறு திருச்சபையின் பெண்கள் விடுதிகளில் சுயமாகச் சென்று பின்தங்கிய மாணவச்சிறார்களுக்கு  ஆங்கிலம் கற்பித்ததை திருச்சபை மறக்கமாட்டாது. அவர் எப்போதும் நீதிக்காகவே குரல் கொடுப்பார். உண்மை, நீதி, கடமை உணர்வு இவரது  இயல்பான குணங்கள். இவர் தனது குடும்ப வாழ்விலும் அர்ப்பணிப்போடு செயல்பட்டவர். தனது மனைவியையும், மகனையும் மிகவும் நேசித்தவர். கணவனும் மனைவியுமாக இணைந்து மகனை இறை பக்தியிலும், கல்வியிலும் வளர்த்து சமூகத்திலும், திருச்சபையிலும் முன்னுதாரணமான மகனாக  வளர்த்துள்ளனர். எங்கள் திருச்சபையிலே பண்பான  ஒரு குடும்பம். இவர் தனது மனைவியை C.D.50 மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டுடுக்கு,டுக்குஎன்று  எனது வீட்டிற்கு வந்து பணிபற்றிக் கலந்துரையாடுவார்.

    எனது வாழ்நாளில் ஐயாவை மறக்கவே முடியாது. இவரைப் போன்ற பணியாளர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. இருந்தாலும் எமது விசுவாசம்,” இந்த உலகிலே செய்யப்படும் பணிகளுக்கு பரத்திலே கணக்கு வைக்கப்படும்”. அன்னாரின் ஆன்மாவை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக .

கல்லாறு மெதடிஸ்த சேகரம் சார்பாக

R.G.தயாளன்

Comments

Popular posts from this blog

"Remembering ‘Veerasingam Ayya’" - Dr. Philip G. Veerasingam

“My Teacher, Mr. Daniel Gnanasothy Veerasingam" - Rev. Kanapathippillai David Jebanayagam

“வீரசிங்கம் அங்கிள்,” நீங்கள் இல்லாத உலகில் நான் - அன்பு சித்தார்த்தன்

"About Sothy. From Selvar Anna." - Jacob. G. Veerasingam

About My Good Friend from School Days, “Daniel.” - Mr. Elkanah Alagurajah

"Sothy Bappa’s Memorial" - Dr. Queenie Veerasingam

என்றும் நீங்காத பெறா மகன் கபிலனின் நினைவுகளிலிருந்து...

"ஜீவனின் அப்பம்" - Jeevanin Appam | Sung by Daniel G. Veerasingam

“கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள்” - உடன்பிறவா சகோதரி, சலா