என்றும் நீங்காத பெறா மகன் கபிலனின் நினைவுகளிலிருந்து...

 


    இந்தப் பிரபஞ்சத்தின் நீட்சிக்கும் மனித இனத்தின் இருப்புக்கும் ஒரு மனிதனை யாராவது பேச வேண்டும், யாராவது ஒருவர் கவனிக்க வேண்டும், யாராவது ஒருவர் பாராட்ட வேண்டும், யாராவது ஒருவர் பெருமை கொள்ள வேண்டும், யாராவது தொடர வேண்டும், யாராவது ஒருவரை ஈர்க்க வேண்டும், யாராவது ஒருவர் கேட்க வேண்டும். எனது வாழ்வின் படி நிலைகளிலும் அப்படியான ஒருவராக வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டிருப்பவர் தான் எனது வீரசிங்கம் அங்கிள். 

    நான் இன்று நம்ப முடியாத அளவுக்கு உங்களுக்கு நன்றி உடையவனாக, கடமைப் பட்டவனாக இருக்கிறேன். ஏனெனில் இவை அனைத்தையும் பெற்றுக்கொண்டு அனுபவித்த ஒருவனாக நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். என்னுடைய இளமைப் பருவத்தையும் பாடசாலைக் கல்வியையும் உங்களுடன் இருந்து அந்த நாட்களை செலவிட்டது இன்றும் எனது மனதில் நீங்காத நினைவுகளாய்.............

    குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள், ஏன் இந்த சமூகத்திற்கும் என சகல இன்ப துன்பங்களிலும் முழுமையாக எப்பொழுதும் உங்களை ஈடுபடுத்தி சமூக முன்னேற்றத்திற்காக உழைத்தவர்களில் அங்கிளும் ஒருவர்.

    எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஒருமுறை நான் சிவானந்தா விடுதியில் இருக்கும் போது ஒருநாள் விடுதிக்கு முன்னால் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. நான் மிகவும் பயத்துடன் காணப்பட்டேன். அந்த சண்டை முடிவடைந்து 15 நிமிடங்களில் உங்களது மோட்டார் சைக்கிள் என்னைத் தேடி வந்து நின்றது. அந்த அளவிற்கு என் மீது நீங்கள் பாசம் வைத்திருந்தீர்கள்.

    பின்நாட்களில் நான் விடுதியில் இருந்து வெளியேறி உங்களுடன் உங்களுடைய வீட்டிலேயே தங்க நேர்ந்தது. அந்நாட்களில் என்னை உங்களது மூத்த புதல்வராக ஏற்றுக்கொண்டு வழிநடத்தி இருந்தீர்கள். அந்த நாட்கள் எனக்கு மிகவும் முக்கியமான, பாக்கியமான நாட்களாக இருந்தன. நானும் தம்பியும் சேர்ந்து செய்த குழப்படிகள்,சேட்டைகள் அனைத்தும் கண்முன்னால் வந்து செல்கின்றன. குறிப்பாக அதிகாலை வேளை எங்களை நீங்கள் எழுப்புவதற்காக முட்டை கோப்பியுடன் வந்து “கப்பிண்ணா, தம்பான் எழும்புங்கோ, குஞ்சு கோப்பி குடியுங்கோ” என்று எழுப்பும் குரல் காதுகளில் இன்றும் ஒலிக்கிறது. பின்னர் ஒரு கையில் வாங்கி குடித்துவிட்டு கட்டிலின் அடியில் கோப்பையை வைத்து விட்டு தூங்குவது வேறுகதை. அந்தளவுக்கு கண்டிப்பான ஒரு அன்பான தந்தையை உங்களிடம் கண்டிருக்கிறேன்.

    வீரசிங்கம் அங்கிள்! நீங்கள் ஒரு திடமான மனிதர், கடின உழைப்பாளி, பொதுவாக இரக்க குணம் உள்ளவர், அதற்கு நீங்கள் இல்லாத இந்த நாட்களிலும் உங்களைத் தேடி வீடு வந்து செல்லும் ஏழை எளியவர்களே சாட்சியமாகும். அவர் அனுபவித்த வெற்றிக்கும் வளமான வாழ்க்கைக்கும் தகுதியானவர். நீங்கள் எனக்கு பல விடயங்களை கற்றுத்தந்துள்ளீர்கள். முக்கியமாக சொல்வதானால் “எல்லாம் உன்னால் சாத்தியம். நேர்வழியில் செல்பவன் ஒருபோதும் பயப்பட வேண்டியதில்லை.” என்பதை எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்.

    அங்கிள் உங்களது அன்பு நிபந்தனையற்றது. இது உங்கள் குணத்திலிருந்து நான் கற்றுக் கொண்ட மற்றுமொன்று. இதை நான் எப்போதும் என்னுடன் வைத்துக்கொள்வேன். உங்களை அறிந்த, உங்களுடன் பழகிய எல்லோருக்கும் உங்களது இரக்கமும், தாராள மனப்பான்மையும் என்றுமே நினைவில் இருக்கும்.

    நீங்கள் ஒரு கட்டுப்பாடான பாடசாலை அதிபர், சிறந்த ஆசிரியராக திகழ்ந்துள்ளீர்கள். எனக்கு நன்றாக தெரியும் சாதாரண தரப்பரீட்சை தோற்ற முன்னர் நான் எந்தவொரு பிரத்தியேக வகுப்புகளுக்கும் சென்றதில்லை. அனைத்து பாடங்களும் நீங்களே கற்றுத்தந்தீர்கள். நீங்கள் ஒரு சகல துறைகளிலும் பன்முகத் திறமை கொண்ட ஆளுமை. அதனால்தான் என் மீது நம்பிக்கை வைத்து கற்பித்து சிறந்த பெறுபேற்றைப் பெற வைத்துள்ளீர்கள்.

    எனக்கு எப்போதுமே ஆதரவும், ஆலோசனையும், நிறைந்த அன்பையும் வழங்கும் ஒரு நண்பனாக இருந்துள்ளீர்கள். அதனால்தான் என்னவோ எனக்கு நண்பர்கள் அதிகம் இருந்ததில்லை. இன்றும் கூட இல்லை.

    என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும், கல்வியிலும்  உங்களுடைய அக்கறை என்பது மிகவும் பெறுமதியானது. அதனால்  பெருமையுடையவராக இருந்தீர்கள். ஒரு போதும் என்னை யாரிடமும் விட்டுக் கொடுத்து பேசி இருக்க மாட்டீர்கள். நான் முதன்முறையாக லண்டன் பயணமாக இருந்தவேளை, விசாவுக்கான விண்ணப்பங்களை ஏஜென்சி மூலமாக ஏனையவர்கள் அனுப்பும் போது, நீங்கள் பூரணப்படுத்தி நான் நேரடியாக வெளிநாட்டு தூதரகத்திடம் ஒப்படைத்தேன். பின்னர் அந்த முறை ஏனையவர்களின் வீசா நிராகரிக்கப்பட எனக்கு மட்டுமே விசா கிடைத்ததும் யாவரும் அறிந்ததே. இந்த இடத்தில் உங்களது மொழிப்புலமையும், முக்காலத்தையும் உணரும் ஆற்றலையும் நினைவு கூர கடமைப்பட்டுள்ளேன். நேரடியாக சென்று விண்ணப்பங்களை வழங்கியது மட்டுமன்றி, நேர்முக பரீட்சைகளை வெற்றி கொள்வது போன்ற சூட்சுமங்களையும் கற்றுத்தந்து, தைரியமூட்டி என்னை பின்னாலிருந்து முன்னகர்த்தி ஒவ்வொரு படிநிலையிலும் வெற்றிபெற வைத்தீர்கள். 

    இன்று நான் திருமணம் ஆகியிருந்தாலும் என்னுடைய ஒரு ஊன்றுகோலை, மறைமுகமாக என்னை இயக்கும் ஒரு சக்தியை, துவண்டபோதெல்லாம் தாங்கிக்  கொள்ளும் கரங்களை இழந்தது போன்று உணர்கிறேன். அங்கிள் உங்களது இழப்பு என்னைப்பொறுத்தவரை தந்தையின்றி வளர்ந்த எனக்கு எவ்வாறு இருக்கிறது என்பதை சொல்லிவிட இந்த ஒரு ஆவணத்தில் அடக்கிவிட முடியாது.

    இன்று என்னை எப்போதும் எனது அம்மா உங்களுடைய ஒரு  பிம்பமாகவே பார்க்கின்றார். அந்த அளவுக்கு உங்களது குணாதிசியங்கள் என்னை ஆட்கொண்டிருக்கின்றன.

    என்றும் உங்கள் ஆத்ம சாந்திக்காக கடவுளை வேண்டிக் கொண்டிருக்கும்

 

பெறா மகன்

கபிலன் அன்புரெத்தினம்

லண்டன்

 

Comments

Popular posts from this blog

"Remembering ‘Veerasingam Ayya’" - Dr. Philip G. Veerasingam

“My Teacher, Mr. Daniel Gnanasothy Veerasingam" - Rev. Kanapathippillai David Jebanayagam

“வீரசிங்கம் அங்கிள்,” நீங்கள் இல்லாத உலகில் நான் - அன்பு சித்தார்த்தன்

"About Sothy. From Selvar Anna." - Jacob. G. Veerasingam

About My Good Friend from School Days, “Daniel.” - Mr. Elkanah Alagurajah

"Sothy Bappa’s Memorial" - Dr. Queenie Veerasingam

"ஜீவனின் அப்பம்" - Jeevanin Appam | Sung by Daniel G. Veerasingam

“கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள்” - உடன்பிறவா சகோதரி, சலா

அமரர் திரு.D.G. வீரசிங்கம் ஐயா அவர்களின் திருச்சபைப் பணி வாழ்விலே , என் நினைவில் உதித்த நினைவுகள் - R.G.தயாளன்