"கண்டுமணியின் அதிபராய் D.G.அவர்கள்" - ஆ.புட்கரன் (அதிபர் , பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம்)

 

மதிப்புக்குரிய அமரர் D.G.வீரசிங்கம் அதிபர் அவர்கள் ஆசிரியராக , அதிபராக இப்பாடசாலையின் வளர்ச்சியில் தன் பங்களிப்பினை வழங்கியிருந்தார் என்பது நாம் அறிந்ததே. அவர் ஆங்கில பாடத்திற்கான ஆசிரியராக இங்கு நியமனம் பெற்றபோது அவரது ஆங்கில வார்த்தைப் பிரயோகத்தை கண்டு புளகாங்கிதம் அடைந்தோம். அக்காலம் மிகவும் நெருக்கடியான ஒரு காலம் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறான சூழலிலும் மாணவர்களின் கல்விநிலை இழிநிலைக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் கருத்துடன் உழைத்தவர். தான் மட்டக்களப்பு நகரில் வசித்த போதும் மாலை நேர வகுப்புகளை நடாத்தி மாணவர்களின் உயர்வுக்காய் உழைத்தவர்.

            இக்காலப்பகுதியில் தான் இங்கு அதிபராகப் பணியாற்றிய திரு.தெ.சுப்பிரமணியம் அதிபர் அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றபோது 25.01.1994ம்   நாள் அதிபர் எனும் பொறுப்பை தன் தலைமீது சுமக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டார். அமரர். D.G.வீரசிங்கம்ஐயா அவர்கள், இருந்தபோதும் அவர் எதிலும் விட்டுக் கொடுக்கவும் இல்லை, எதைக்கண்டு அஞ்சவுமில்லை. தனது பணியை ஆர்வத்துடனும் முனைப்புடனும் முன்னெடுத்தார். அதிபர் பதவியுடன் ஆங்கிலக் கல்வியை மாணவருக்குப் புகட்டுவதில் முனைப்புடன் செயற்பட்டார். அவரோடு இணைந்து பணியாற்ற சிறந்த ஆசிரியர் குழாம் ஒன்று அக்காலப்பகுதியில் இருந்தது என்பதை யாரும் மறக்கமுடியாது.

            இவ்வாறு தன்பணியைச் சிறப்பாக முன்னெடுத்த போதும் அவ்வப்போது எழுகின்ற பிரச்சினைகள் எல்லாம் அதிபரை நோக்கியே விரல்நீட்டும் என்பது வழமையான ஒன்றுதான். அதனால் தான் அதிபர் கதிரை என்பது சூடான இருப்பிடமாக மாறிவிடும். இவ்வாறான ஒரு சூழலில் ஒரு பிரச்சினையை மதிப்புக்குரிய திரு.D.G.வீரசிங்கம் ஐயா அவர்களும் எதிர்கொண்டார். எந்தப்பிரச்சனைகளையும் நிதானமாகவும் யதார்த்த பூர்வமாகவும் சிரியபிரச்சினையாக எதிர் கொண்டு தீர்வு காணும் திறமை அவரிடம் இருந்தது. பிரச்சினை பற்றி என்னுடன் கலந்துரையாடும் போது கூறினார் இந்த பிரச்சனையெல்லாம் சேர், பறக்கிற ஈ (கொசு) மூக்கில மொய்க்கிற மாதிரி தட்டிவிட்டா பறந்திடும் என்றார். இது அவரது பிரச்சினையை கையாளும் விதம் பற்றிய தெளிவை ஏற்படுத்தும் என நினைக்கிறன்.அவ்வாறுதான் அவருடைய செயல்பாடுகளும் அமைந்திருந்தது. தான் பொறுப்பெடுத்த விடயங்களை செவ்வனே நிறைவேற்றும் தன்மை அவரிடம் கண்டோம்.

            அதிகமாக  எதையும் பேசாமல் விடயத்தை மட்டும் தெளிவுபடுத்தும் ஆற்றல் அவரிடம் இருந்தது. பாடசாலையின் பரிசளிப்பு விழாவை 02.05.1994 இல் மிகவும் சிறப்பான முறையில் நடாத்தி முடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

            இந்நிலையில் அவரது மனைவியார் மாக்கிரட் அற்புதமலர் அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபராக கடமையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்ட போது தனது ஒரே மகன் எபனேசர் பிறேமன் இன் கல்வி நடவடிக்கைகளை கண்காணிக்கவேண்டிய பொறுப்பு இவர்மீது சுமத்தப்பட்டதால் இங்கிருந்து இடமாற்றம் பெற்றுச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அமரர் மதிப்புக்குரிய D.G.வீரசிங்கம் ஐயா அவர்களைக் குறிப்பிடும் போது அவரது மனைவியார் பற்றியும் குறிப்பிட்டே ஆகவேண்டும். தாதியர் சேவைக்கே என்று பிறந்த மென்மையான போக்கும், இனிமையான பேச்சும் அவருக்கே தனித்துவமானது. எல்லோரும் அதிகமாக “மலரக்கா” என்றே அழைப்பார்கள். அவ்வாறே அவர் எல்லோருடனும் பழகும் மென் போக்கும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

            அமரர் மதிப்புக்குரிய D.G.டானியல் ஞானசோதி வீரசிங்கம் ஐயா அவர்கள் தமது மண்மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். பழுகாமம் என்றாலே அவருக்கு தனிப்பற்று . அடிக்கடி இங்குவரும் அவர் பாடசாலை பற்றியும் அவரது முன்னைய ஆசிரியர்கள் பற்றியும் விசாரிக்காமல் விடமாட்டார். அந்த அளவுக்கு எல்லோரையும் நேசித்தவர். ஆங்கிலத்தில் பற்றுக் கொண்டதாலோ என்னவோ இங்கு ஒரு ஆங்கில பாலர் பாடசாலை ஆரம்பித்ததிலும் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

            இவ்வாறு அளப்பரிய பணிகளை ஆற்றிய இறுதிக்கட்டத்தில் பழுகாமத்தில் இருக்க வேண்டுமென நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை அவரது ஆத்துமா இங்கே நிலை கொண்டது .

            “எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல

              இப்படித்தான் வாழவேண்டும் என்னும் தத்துவத்தோடு”

வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவர் அமரர் அவர்கள். அன்னாரின் ஜீவாத்மா ஆண்டவன் அடியில் அமைதியாக இளைப்பாரட்டும்.

 

ஆ.புட்கரன்

அதிபர் ,

மட் / பட் / பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம்

Comments

Popular posts from this blog

"Remembering ‘Veerasingam Ayya’" - Dr. Philip G. Veerasingam

“My Teacher, Mr. Daniel Gnanasothy Veerasingam" - Rev. Kanapathippillai David Jebanayagam

"Sothy Bappa’s Memorial" - Dr. Queenie Veerasingam

“வீரசிங்கம் அங்கிள்,” நீங்கள் இல்லாத உலகில் நான் - அன்பு சித்தார்த்தன்

"ஜீவனின் அப்பம்" - Jeevanin Appam | Sung by Daniel G. Veerasingam

"About Sothy. From Selvar Anna." - Jacob. G. Veerasingam

About My Good Friend from School Days, “Daniel.” - Mr. Elkanah Alagurajah

என்றும் நீங்காத பெறா மகன் கபிலனின் நினைவுகளிலிருந்து...

"God’s Comfort and Strength in Our Times of Grief" - Ebenezer Veerasingam

“கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள்” - உடன்பிறவா சகோதரி, சலா