"மறைந்தும் மானசீகரமாக எம்மை வழிப்படுத்தும் எமது ஆசான்" - முருகு தயானந்தன்

 



சமய, சமூக கடமைகளை பரிபூரணமாக மேற்கொண்டு இப்பூவுலகை விட்டுப் பிரியும்வரை உயர்வான மானிடப்  பண்பாளராக திகழ்ந்தவர்  என் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய பேராசான் உயர் D.G. வீரசிங்கம் சேர். இவரிடம் கற்பதற்கும் பழகுவதற்கும் வாய்ப்பு கிடைத்தமை யான் செய்த பாக்கியமே.

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில்தான் முதலில் சந்தித்தேன். அப்போது நான் தரம் 6 இல்   கற்றுக் கொண்டிருந்தேன். இவர் ஒரு இளம் விஞ்ஞானப் பட்டதாரியாக, சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் சேவையாற்றிய காலம் பாடசாலை விடுதியில் தங்கி முழுநேர சேவை வழங்கினார்.  எங்களுக்கு கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை கவர்ச்சிகரமாக கற்பித்தார்.  இவரின்  கற்பித்தல் பாணி தனிச்சிறப்பானது. பின்தங்கிய மாணவர்கள் உட்பட்ட சகல மாணவர்களையும் பாடப்புலத்திக்கு கொண்டுவருவது சரிய அடைவை எட்ட வைக்கும் அற்புதமான அணுகுமுறை.  வகுப்பறை உயிரோட்டமாகவும் உற்சாகமாகவும் துலங்கும். ஆங்கிலத்தில்  புலமையாளர் ஆன இவர் அநேக  வேளைகளில் ஆங்கிலத்திலேயே சொல்லாடல் புரிவார். ஆங்கிலத்தை அழகாகவும், மிடுக்காகவும் உச்சரித்து பேசும் இவரின்  கவர்ச்சிகரமான தொடர்பாடல் நுட்பத்தில் உந்தப்பட்டு நாளடைவில் நாமும் ஆங்கிலத்தில் உரையாட சக்தி பெற்றோம். இன்று நாம் ஆங்கிலத்தில் விளங்கிக் கொள்வதற்கு இவர் இட்ட அடிப்படைதான் காரணம்.

இவர் ஒரு நல்லாசிரியனாக, சிறந்த அதிபராக, சமூக சேவகனாக, பாடகராக, நடிகராக, இசைக்கருவிகளை இசைப்பவராக, சிறந்த நிருவாகியாக, சிறந்த மறை ஊழியனாக, சிறந்த கணவனாக, சிறந்த தந்தையாக பல வகிபாகங்களை திறம்பட மேற்கொண்டு அடுத்தவர்களின் நலனுக்காக சேவையாற்றியுள்ளார்.

அடுத்தவரை சரியாகப் புரிந்து அவர்களின் மனதைக் கீறாமல் நாகரீகமான பண்புமிக்க தொடர்பாடலை மேற்கொள்வது இவரின் சிறப்பியல்பாகும். இதனால் இவர்மேல் சகலரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.

இவரிடம் இருந்து நாங்கள் பாடங்களை மாத்திரம் கற்கவில்லை, உயர் பண்புகளையும் கற்றுக்கொண்டோம். அத்துடன் இப்போது பேசப்படும் மென்திறன்களையும் அப்போது அவரிடம் இருந்து கற்றுக்கொண்டோம். அவரிடம் இருந்து பெற்றுக்கொண்ட அடிப்படை திறன்கள்தான் எமது ஆளுமை விருத்திக்கு பங்களிப்பு செய்தன. “நீர் தலைவன் உன்னால் முடியும், நீர் நல்லவன் இயலுமை உள்ளவன், வெற்றி பெறுவாய், தயக்கமின்றி முன்னேறு” போன்ற நேர்சிந்தனை சொற்களையே பயன்படுத்துவார். இவைகள் எம்மை நேரிய சிந்தனையை நோக்கி பயணிக்க வைத்தன. இன்றுவரை நான் கடைப்பிடிக்கும் சுயஒழுக்கம், சுயகட்டுப்பாடு, சுயவிமர்சனம் அவர் மூலம் பெற்றுக்கொண்டவையே.

அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆனந்தம் அடையும் இவர் தேவை நாடிகளை தேடிச்சென்று உதவியுள்ளார். இவரது சகல சேவைகளும் விளம்பரமின்றி தன்னடக்கமாகவே இடம்பெற்றுள்ளதை நான் அறிவேன். இவரிடம் எனக்குப்பிடித்த இன்னொரு பண்பு எளிமையான வாழ்க்கை. ஆடம்பரமற்ற அமைதியான வாழ்க்கையே விரும்பினார். இவரது கொள்கைக்கு ஏற்ற வகையிலே இவரது வாழ்கைத்துணைவியாரும் வாய்த்தது இவர் வாழ்வில் மலர்ச்சியை கொண்டுவந்தது. இவ்வாறே இவரது ஏகபுத்திரன் பிறேமனும் கிடைத்தது இவர் செய்த பாக்கியமே. அப்பாவின் பெயரை உலகறியச் செய்யும் புலமையும் பக்குவமும் பிறேமனிடம் நிறைந்தே காணப்படுகிறது. இவ்வாறான உயரிய பண்புகளையும், திறன்களையும் கொண்ட எமது குருவானவர் இன்று எம்மத்தியில் இல்லை. அவர் வாழ்வியலின் சகல அம்சங்களையும் பூரணமாக முடித்துவிட்டே சென்றுள்ளார். கத்தருக்குள் நித்திரையாகிவிட்ட அவரின் தூய ஆன்மா ஈடேற்றம் அடைய இறைவனை வேண்டி நிறைவு செய்கின்றேன். 

- முருகு தயானந்தன் 

Comments

Popular posts from this blog

"Remembering ‘Veerasingam Ayya’" - Dr. Philip G. Veerasingam

“My Teacher, Mr. Daniel Gnanasothy Veerasingam" - Rev. Kanapathippillai David Jebanayagam

"Sothy Bappa’s Memorial" - Dr. Queenie Veerasingam

“வீரசிங்கம் அங்கிள்,” நீங்கள் இல்லாத உலகில் நான் - அன்பு சித்தார்த்தன்

"ஜீவனின் அப்பம்" - Jeevanin Appam | Sung by Daniel G. Veerasingam

"About Sothy. From Selvar Anna." - Jacob. G. Veerasingam

About My Good Friend from School Days, “Daniel.” - Mr. Elkanah Alagurajah

என்றும் நீங்காத பெறா மகன் கபிலனின் நினைவுகளிலிருந்து...

"God’s Comfort and Strength in Our Times of Grief" - Ebenezer Veerasingam

“கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள்” - உடன்பிறவா சகோதரி, சலா