"பாசமுடன் நேசித்த “ பெப்பா” என்னும் பெரியப்பா, உனையிழந்து உளமுருகித் தவிக்கின்றேன்." - பெறாமகள் , பியூலா

 


பிறந்தநாள் தொடக்கம் பிரியமுடன் எனை நேசித்தீர்கள் .

பெறா  மகளைப்  பெற்ற மகளாய்  அன்பு காட்டி அரவணைத்தீர்கள். பாலர் வகுப்புக்கும் பக்குவமாய் அழைத்துச்சென்று பரிவு காட்டினீர்கள் .கலவரம்  மலிந்த காலங்களில் கரிசனையோடு துவிச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று பாதுகாப்புத் தேடித்தந்தீர்கள். 

ஆங்கில மொழி என்றால் அயலவர் மொழி என்ற நிலையை மாற்றி தினந்தோறும் அதைப் பேசி திறமையூட்டினீர்கள்.ஆங்கிலத்தில் கவிதை  கூறவும் போட்டிகளை எதிர் கொள்ளவும் இலகு வழிகளை எடுத்துக்காட்டினீர்கள்.  எத்தனையோ ஆசானிடம் பயின்றாலும் எந்தன் முதல் ஆசான் நீங்கள்தான் பெப்பா! சின்னப்பருவத்தில் சிந்தனையில் நிலைத்துநிற்கும் கதைகளுடன், பாட்டுக்கள் எல்லாம் உங்கள் நினைவுகளை மீட்டு தருகின்றன பெப்பா! உங்கள் நினைவுத்தடங்கள் நீண்டுகொண்டே செல்கிறது பெப்பா! சைக்கிளோட்டம் பழக்கி  ஆனந்த சாகரத்தில் மூழ்க வைத்தீர்களே, அதை மறப்பதா ?

“பெம்மா” எனும் பெரியம்மா கல்விக்காக சிலமாதங்கள் தாய்லாந்துக்கு சென்றபோதும் அண்ணாவை கண்ணும் கருத்துமாய் கவனித்தது போல் இம்மையளவும் குறையாமல் என்னையும் உங்கள் பெற்ற மகளாய் பிரியமுடன் நேசித்து காத்தீர்களே, அதை மறப்பதா ?எங்கள்  உயர்ச்சிகளுக்கு எல்லாம் தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உள்ளத்தையும் கண்டோம். தோல்வியில் துவண்டபோது மனோதிடமூட்டும்  உங்கள் அரவணைப்பையும்  கண்டோம் பெப்பா!

பெம்மாவும் பெப்பாவும் தாய் தந்தையின் ஸ்தானத்தில் என் திருமணத்தில் அக்கறை கொண்டதும் ஆனந்தம் அடைந்ததும் நெஞ்சை விட்டு அகலாது, கண்ணீரை வரவழைக்கிறது பெப்பா!

சந்ததி  தழைத்தோங்க நான் கருவைச்  சுமந்த செய்தி உங்கள் இதயத்தில் இன்பமாய் இனித்தது.பெண் குழந்தை கிடைத்தபோது இன்னும் இரட்டிப்பாய் மகிழ்ந்த்தீர்கள். மருத்துவ பரிசோதனைகள் ஒவ்வொன்றும் பெம்மாவுடன் பேசும்போதும் அன்புடனும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் விசாரித்தறிவீர்கள்.

குழந்தை சந்தோஷமாய் இருந்தது என்று தாதி சொன்ன சொல்லை தாரக மந்திரமாய் நெஞ்சில் நிறுத்தி பியூலாவும் குழந்தையும் நலமாக உள்ளார்கள் என்று உறவுகளிடம் உள்ளத்து அன்போடு உரையாடி மகிழ்ந்த்தீர்கள் .

நிறை மாத காலத்தில் நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் உங்கள் கரிசனையை வெளிப்படுத்துவதாய்  அமைந்தன பெப்பாபைபிள் படிக்க சொன்னீர்கள், இசை பாடல்களை இசைக்கவும் சொன்னீர்கள்.வயிற்றில் வளரும் குழந்தையின் சந்தோஷத்தில் எத்தனை பரிவுடன் எவ்வளவு ஆலோசனைகளை எடுத்து கூறினீர்கள் .பெம்மாவுடன் நான் பேசும்போதெல்லாம் தோளின் பின் நின்று முகம் காட்டி குழந்தையை “Hannah… Hannah…” என்று அழைக்கும் குரல் ஓசையினை  இனி எங்கு கேட்பது என ஏங்குகிறேன் பெப்பா! அந்த அன்பு ஓசை இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

இளமையில் என் மீது காட்டிய பரிவும் பாசமும் என் குழந்தை மீதும் உங்களுக்கு தொடர்ந்தது பெப்பா !தொலைவில் நாம் இருந்தாலும் தொடர்பாடல் வசதியோடு குழந்தையுடன் நீங்கள் பேசும் மழலை மொழியும் இசைக்கருவிகளுடன் பாடல் பாடி அகம் மகிழும் தருணங்களும் அறியாப் பருவத்தில் முன்பள்ளி பாடல்களை அறிமுகப்படுத்தி பாடவைத்த  உங்கள் பக்குவமும் என்னை வழிகாட்டியது. சற்றும் குறையாத வகையில் என் குழந்தையையும் நெறிபடுத்திய உங்கள் நினைவலைகள் என்றுமே மனதை விட்டு நீங்காது பெப்பா!

உங்கள் இறுதிக் காலங்களில் பழுகாமம்  வாசத்தில் “எங்களுக்கு ஆறுதல் எமது அருமை குழந்தைதான்” என்று பேசிய வார்த்தைகளை பிறர் சொல்லக் கேட்ட போதும் உங்கள் அருகில் இல்லையே என ஏங்கி தவித்தேன். எனது  அழைப்பு  தாமதமானாலும் அம்மாவிடம் விசாரித்து நீங்களே அழைத்து குழந்தையுடன் கொஞ்சி ,கதைபேசி ,பாடல் பாடி மகிழ்ந்திருந்த பொழுதுகளை மறக்க மனம் கூடுதில்லையே பெப்பா !

அருகில் இருந்து அன்பு காட்டி அளவளாவக்   கொடுப்பினை இல்லையெனினும் முகம்பார்த்து பேசிப்பேசியே அத்தனை அன்பையும் என் குழந்தை மீது கொட்டினார்கள். நீங்கள் காட்டிய அந்தப் பாசமும் நேசமும் காணொளி படங்களாகவே எமக்கு ஆறுதல் ஊட்டுகின்றன பெப்பா. பெப்பா! உங்கள் நினைவுகளும் நீங்கள் கற்பித்த உங்கள் வாழ்க்கையின் வழிநடத்தல்களும் என்னுயிர் உள்ள வரை கொண்டு செல்வேன், நீங்கள் பிதாவின் கரத்திலே ஆறுதலான நித்திரை கொண்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் உயிருள்ளவரை தொடரும் ...!!!

 

இப்படிக்கு ,

அன்புள்ள பெறாமகள் ,

பியூலா

From London

Comments

Popular posts from this blog

"Remembering ‘Veerasingam Ayya’" - Dr. Philip G. Veerasingam

“My Teacher, Mr. Daniel Gnanasothy Veerasingam" - Rev. Kanapathippillai David Jebanayagam

"About Sothy. From Selvar Anna." - Jacob. G. Veerasingam

About My Good Friend from School Days, “Daniel.” - Mr. Elkanah Alagurajah

“வீரசிங்கம் அங்கிள்,” நீங்கள் இல்லாத உலகில் நான் - அன்பு சித்தார்த்தன்

"Sothy Bappa’s Memorial" - Dr. Queenie Veerasingam

"ஜீவனின் அப்பம்" - Jeevanin Appam | Sung by Daniel G. Veerasingam

என்றும் நீங்காத பெறா மகன் கபிலனின் நினைவுகளிலிருந்து...

“கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள்” - உடன்பிறவா சகோதரி, சலா

"நினைவலைகள்…" - உடன்பிறவா சகோதரன், த. அ. பத்மசீலன்